Showing posts with label Aqueduct. Show all posts
Showing posts with label Aqueduct. Show all posts

Friday, February 24, 2017

வெளுவெமீர் கால்வாய்ப்பாலம்' (Veluwemeer Aqueduct)

கட்டுமானப் பணிகள் காலத்துக்குக் காலம் புதிய எண்ணங்களை பிரதிபலிக்கும் வண்ணம் கட்டட விற்பன்னர்களால் அமைக்கப்பட்டு வருகின்றமை கட்டுமானத்துறையில்அதிக முதலீட்டாளர்களை கவர்ந்ததிழுக்கச் செய்கின்றது. ஒரு நாட்டின் பொருளாதார வளர்ச்சியை பறைசாற்றி நிற்பது கட்டிடங்களும் தெருக்களுமே. அதேபோல் பொருளாதார வீழ்ச்சியால் முதலில் பாதிக்கப்படும் துறையாக கட்டுமானப் பணிகள் காணப்படுகின்றன. பொதுவாக பின்தங்கிய இடங்களை அபிவிருத்தி செய்யவேண்டுமெனில் முதலில் சிறந்த முறையில் வீதிகள் இடப்பட வேண்டும், என்பது பொதுவாக அனைவராலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட உண்மையே. இன்றைய காலகட்டத்தில் போக்குவரத்து நெரிசல் என்பது எல்லா நாட்டிலும் காணப்படுகின்ற மிக முக்கிய பிரச்சனை. அது ஒரு சுனாமி போன்று எப்போதும் உருவாகலாம் என்ற நிலையே அனைத்து இடங்களிலும். போக்குவரத்து நெரிசல்களுக்கு முக்கிய காரணம் என்னவெனில் நாடொன்றில், அதிகரிக்கின்ற வாகன இறக்குமதி அல்லது உற்பத்தி செய்யப்படுகின்ற வீதத்துடன் வீதிகளின் விஸ்தரிப்புகள் அதிகரிக்கப்படுவதில்லை.


கட்டுமானத்துறையுடன் தொடர்புபட்ட திருக்குறளை தேடியபோது 'மணிநீரும் மண்ணும் மலையும் அணிநிழற் காடும் உடைய தரண்' என்ற குறள் கீழே உள்ள கட்டுரையுடன் பொருந்தி செல்வதை அவதானிக்கக் கூடியதாய் இருந்தது. தரப்பட்ட குறளுக்கு 20ஆம் நூற்றாண்டின் புகழ் பெற்ற தமிழ் அறிஞர்களுள் ஒருவரான மு. வரதராசன் அவர்களின் உரை பின்வருமாறு 'மணிபோல் தெளிந்த நீரும், வெட்ட வெளியான நிலமும், மலையும், அழகிய நிழல் உடைய காடும் ஆகிய இவை நான்கும் உடையதே அரண் ஆகும்'.


சாதாரணமாக ஒரு கட்டிடத்தையோ வீதியையோ அமைக்கும்போது முதலில் புவிசார் காரணிகள் பரிசோதிக்கப்பட்டே அதற்குரிய அனுமதி குறிப்பிட்ட மாநகரசபையாலோ அல்லது பிரதேச சபையால் வழங்கப்படும். இன்றைய காலகட்டத்தில் பாலங்கள் என்பது வீதி நிர்மாணங்களின் போது முக்கிய கட்டமைப்பாக காணப்படுகின்றது. அந்தவகையில் 'வெளுவெமீர் கால்வாய்ப்பாலம்' (Veluwemeer Aqueduct) ஆனது உலகில் பாலங்கள் கட்டுமானத்துறைக்கு ஒரு மைல்கல்லாக இருக்கின்றது. இக்கால்வாய்ப்பாலமானது நெதர்லாந்தின் கிழக்கு ஹார்டெரவிஜிக் (Harderwijk) எனும் பகுதியில் வீதி இலக்கம் N302 இல் அமைந்துள்ளது. இக்கால்வாய்ப்பாலமானது நியூஸிலாந்தின் முக்கிய நிலப்பகுதிகளையும் உலகிலே மனிதனால் அமைக்கப்பட்ட மிகப்பெரிய செயற்கைத்தீவான பிளேவோலன்ட் (Flevoland) ஐயும் இணைக்கின்றது. இச்செயற்கைத்தீவை சுற்றி மனிதனால் உருவாக்கப்பட்ட மூன்று (3) கடனீரேரிகள் உள்ளன. இந்த மிகப்பெரிய செயற்கைத் தீவானது, மேற்குறிப்பிட்ட  பிளேவோலன்ட் (Flevoland) மற்றும் நூரடூஸ்ட்போல்தேர் (Noordoostpolder)  செயற்கைத் தீவுகளை உள்ளடக்கியதும் ஆகும். இவற்றின் மொத்த நிலப்பரப்பு 970 சதுர கிலோமீட்டர்கள்.


பொறியியலாளர்களும் கட்டிடக்கலைஞர்களும் (Architect) இணைந்து குறைந்த செலவில் மிகவிரைவில் பூர்த்தியாகக் கூடியவகையிலும் சுற்றுச்சூழலின் விரிந்து கிடக்கும் பரந்த அழகை அவ்வாறே ஆரார்த்தி இருக்கத்தக்கதாக இந்த கால்வாய்ப்பாலத்தை அமைத்துள்ளனர். பொறியியலாளர்கள் ஒரு மேம்பாலத்தையோ (Fly Over Bridge) அல்லது ஒரு சுரங்கப் பாதையையோ அமைத்திருக்கலாம் அல்லது முன்மொழிந்திருக்கலாம். ஆனால் அவை அதிக பண செலவுகளையும் அதிக நேரம் தேவையாகவுள்ள திட்டமாக இருந்திருக்கும். இந்த  கால்வாய்ப்பாலமானது எந்த ஒரு சாதனையையும் பதியவில்லை. ஆனாலும் உலகிலுள்ள சிறிய கால்வாய்ப் பாலங்களில் இதுவும் ஒன்று.