Showing posts with label சினிமா. Show all posts
Showing posts with label சினிமா. Show all posts

Saturday, September 2, 2017

புரியாத புதிர்

நேற்று பார்த்த திரைப்படம் விஜய் சேதுபதியின் நடிப்பில் வந்த மற்றொரு புதையல் 'புரியாத புதிர்'. படத்தின் முன்னோட்டத்தை (Trailer) பார்த்தால் அது ஒரு பேய் படமா என தோன்றவைத்தது. ஆனால் அதை தாண்டி ஒரு சிறந்த கதைக்கருவை இரண்டு ஆண்டுகளுக்கு முன்னரே இயக்குனர் கையாண்டிருக்கிறார்.




அது எதுவெனில் 'கையடக்கத் தொலைபேசியிலுள்ள ஒளி-ஒலி சாதனம்' (Phone-Camera). பொதுவாக தமிழ் திரை வரலாற்றில் ஒரு சில படங்களே காலம் தாழ்த்தி வெளிவந்து வெற்றிபெற்றன. உதாரணமாக அஜீத் நடித்த 'வரலாறு' மற்றும் சிம்பு நடித்த 'இது நம்ம ஆளு'. ஆனால்  'புரியாத புதிர்' இரண்டு வருடம் கழித்து மிகச் சரியான நேரத்தில் வெளிவந்துள்ளது. ஏனெனில்  தற்போதுதான் சமூக வலைத்தள பாவனையாளர்களை கொலைப்பயத்துக்குளாக்கிய நீலத்திமிங்கிலம் (Blue Whale) என்ற விளையாட்டின் விபரீதம் ஆசிய நாடுகளை சேர்ந்தவர்களுக்கு குறிப்பாக தமிழர்களுக்கு தெரியவந்துள்ள அதே வேளையில்,  இயக்குனர் கையடக்கத் தொலைபேசியிலுள்ள ஒளி-ஒலி சாதனத்தால் ஏற்பட்ட விளைவை மிகச் சிறப்பாக பார்வையாளர்களை திரைக்கதையுடன் இழுத்துச் சென்றுள்ளார். நிச்சயமாக இத்திரைப்படத்தை பார்த்துவிட்டு வெளியில் வந்து இக்கதையின் கருவை கொண்டு பல சிந்தனைகளுடன் அனைவரும் செல்வது உறுதியே.

அண்மையில் கூட அஜீத்தின் விவேகம் திரைப்படம் பல தொழில்நுட்பவியல் விடயங்களை (Hologram Imaging, Mobile Signal Jamming,Morse Code, Reverse Hacking & Tracking with Pacemaker) எமக்கு திரை போட்டுக்காட்டினாலும் பலரிடம் அது ஒட்டவில்லை, ஏனெனில் பார்வையாளர்களுக்கு பரிச்சயம் குறைந்தவை என்பதாலும் பார்வையாளர்களை கதை தன்னுடன் எடுத்துச் செல்லவில்லை என்றால் சரி போல் உள்ளது.

மொத்தத்தில் 'புரியாத புதிர்' புரிதல்கள் வேண்டி

Thursday, January 12, 2017

மிகப் பெரிய சாதனைகளையும் ஒரு சிறு புன்சிரிப்புடன் தாண்டிச் செல்லும் இசைப்புயல்

1994 ஆம் ஆண்டுகளில் சைக்கிளில் தைனமோ பூட்டி-சுத்தி முக்காலா முக்காப்பிலா மற்றும் ஊர்வசி பாடல்களை திரும்பத் திரும்பத் பலதடவை கேட்டிருப்போம். ஆனால் அப்போது யார் இசை அமைப்பாளர், பாடியவர்கள், கவிஞர், ஒலி-பொறியியலாளர் (Sound Engineer)  என்றெல்லாம் சிந்தித்தது கிடையாது. ஆனாலும் அந்த பாடல் மயக்கம் 23 வருடங்கள் கழிந்தும் எம்மை கட்டிப்போட்டுள்ளது    என்றால் மிகையல்ல. அதற்கு நல்ல உதாரணம் சிலவேளைகளில் வீதியில் செல்லும்போது, அப்பாடல்கள் சில கடைகளில் ஒலித்துக்கொண்டிருக்கும். பின்னர் நாம் வீடு வந்த பின்னர் அப்பாடலை மீண்டும் கேட்டிருப்போம். 'ரோஜா' முதல் இறுதியாக வந்த 'அச்சம் என்பது மடைமையடா' வரை எல்லாமே கேக்க கேக்க பிடிக்கும் வகையறாக்கள். இசையை மாத்திரமல்லாது தமிழ் மொழியையும் உலகிற்கு எடுத்துச் சென்றவர் ரஹ்மான்.

அநேகமான இசை மேதைகளை பார்த்தால் அவர்களிடத்தில் ஆன்மீக சக்தி (Spiritual Power) ஒன்று அவர்களிடத்தில் ஒட்டிக்கொண்டு இருக்கும், உதாரணமாக மெல்லிசை மன்னர் விஸ்வநாதன், இசைஞானி இளையராஜா மற்றும் இசைப்புயல் ரஹ்மான். இளையராஜா ஒரு இசை திமிர் பிடித்த மனிதர். சில இடங்களில் தன்னை பெருமை பேசும் விதமாக இசை செய்வார். ஆனால் அவர் அவ்வாறு செய்வதில் தவறு இல்லை. ஏனெனில் அவர் 100 வீதம் தனது சொந்த இசை அறிவையே பயன்படுத்தி இருப்பார் தனது பாடல்களில். அவரது பாடல்கள் எவ்வாறு எமது வாழ்க்கையோடு இன்றியமையாதது என்பதற்கு ஒரு சிறந்த உதாரணம் சொன்னால், "இளையராஜாவின் இசை நிகழ்ச்சிகளில் சில பாடல்கள் ஒலிக்கையில் ரசிகர்களின் கண்ணிலிருந்து கண்ணீர் ஒழுகும்". இதை விட வேறு ஆதாரம் தேவையில்லை எத்தனை இசை மேதாவிகள் தமிழ் திரைஉலகத்துக்கு வந்தாலும் ராஜா என்றென்றும் ராஜாதான், மாற்றுக் கருத்தில்லை.
பணிவு என்ற சொல்லை நான் அறிவேன் ஆனால் அதை நேரடியாக பார்த்து முதலில் வியர்ந்தது என்னுடன் வேலை செய்த ஒரு மூத்த கணிய அளவியலாளர். அவர் தனது துறையில் ஏறத்தாழ 30 வருடத்திற்கும் அதிக அனுபவம் உடையவர் ஆனாலும் அனைவரையும் மதிப்பது மட்டுமல்லாது தனது அனுபவத்தை விட வயது குறைந்த என்னைப் போன்றவர்களுடனும் எந்தவிதமான சஞ்சலங்களும் (Ego Problem)  இன்றி முழு ஈடுபாட்டுடன் வேலை செய்வார். திரை உலகில் உள்ளவர்களில் பணிவின் சிகரம் என்றால் ரஹ்மான்தான் இருக்க முடியும் என்று நம்புகின்றேன். திரை உலகின் உச்ச வெற்றியாக கருதப்படும் ஆஸ்கார் இரண்டை ஒருவாயில் பெற்றாலும் திருவாய் மறந்து கூட தன்னைப் பற்றி பெருமை கூறியது கிடையாது.  சாதனைகளின் சொந்தக் காரன் சாதாரண மனிதனாக வாழ்கின்றமை வியப்புக்குரியதே. அநேகர்அவனை” விழிப்பது ஒரு கலாச்சாரத்துக்கே, ஆனால் ரஹ்மான் போன்ற ஒரு சிலர் தான் சொல்லும் சொல்லுக்கேற்ப "எல்லாப் புகழும் இறைவனுக்கே" என்று வாழ்கின்றனர். தமிழைப் பற்றி தப்பட்டை அடிப்பவர்களுக்கு மத்தியில் ஒரு ஓடும் தூய நதியாக தனது வெற்றியை தமிழில் பதிவு செய்தார் மேலை நாட்டவர்கள் என்று சொல்லப்படுகின்றவர்கள் மத்தியில்.

என்னதான் மிகப் பெரிய சாதனைகளையும் ஒரு சிறு புன்சிரிப்புடன் தாண்டிச் செல்லும் இசைப்புயல். அத்துடன் எனக்கு அடிக்கடி தோன்றுகின்ற விடயம் யாதெனில் ரஹ்மான் போன்ற சாதனையாளர்கள் ஒரு பொது நிகழ்வில் கலந்து கொண்டிருக்கின்ற வேளையில் இவர்களின் மனநிலை எவ்வாறு இருக்கும்? எதைப் பற்றி சிந்திப்பார்கள்?...

ரஹ்மானுக்கு அடியேனின் 50 ஆவது பிறந்த தின (06 தை) (பிந்திய) வாழ்த்துக்கள்.


இக்கட்டுரையை எழுதி முடிக்கையில் இணையத்தில் கிடைத்த செய்தி ஒன்று, இவர் சோமாலியாவில் 3000 வருடங்கள் பழமை வாய்ந்த சில இசைக்கருவிகளை வாங்கியதாகவும் அவற்றின் விலைகள் மிகக் குறைவாக இருந்தது. காரணம் என்னவென்ற போது அங்கே தலைவிரித்தாடும் வறுமை என்பது அனைவருக்கும் தெரிந்ததே ஆனாலும் ரஹ்மான் மிகப் பெரிய தொகையை அந்நாட்டு அரசே வியக்கும் வகையில் கொடுத்து உதவியுள்ளதாக.

இசைப்புயலின் சில ஞாபகங்கள் 

Saturday, October 27, 2012

சிங்கம்-2 (திரை விமர்சனம்)


இப்படத்தில் வரும் கதை, நிறுவனங்களின் பெயர் மற்றும் உற்பத்திகளின் பெயர்கள் யாவும் கற்பனை என்ற வாசகத்துடன் படம் தொடங்கியது.

ஆறு, வேல் மற்றும் சிங்கம் போன்ற வெற்றிப் படங்கள் தந்த சூர்யா-ஹரி இனது நாலாவது படம்தான் சிங்கம்-2. பெயர்தான் சிங்கம்-2 ஆனால் சிங்கம் படக்கதைக்கு முதலில் நடந்ததாக சொல்லப்பட்டுள்ளது. இப்படம் 'ஹரி என்றால் அரிவாள் என்ற' எண்ணத்தை மறக்க வைக்கிறது.

 சூர்யா (துரையப்பா) தூத்துக்குடியில் கலெக்டர் ஆக வேலை செய்கிறார், மிக இளவயதில் இப்பதவிக்கு வந்த முதல் இந்தியர் என்ற பெருமை இவருக்கு அத்துடன் இவர் சிறந்த குத்துச் சண்டை வீரர். இராணுவத்திலும் பணியாற்றியவர். விநாயகமூர்த்தி என்கின்ற சம்பத் அவ்வூரில் உள்ள பிரபலமான சமூக சிந்தனை உள்ள அரசியல்வாதி. விநாயகமூர்த்தி கடல் நீரை நன்னீராக்கி மக்களுக்கு வழங்குவதற்கென ஒரு மனுவை துரையப்பாவிடம் கையளிக்க அதற்கு அரசாங்கமும் அனுமதி வழங்குகின்றது. ஹன்சிகாவின் தந்தையே விநாயகமூர்த்தி. சூர்யாவும் ஹன்சிகாவும் காதலர்கள் ஆகின்றனர். இதனை விநாயகமூர்த்தி கண்டும் காணாமல் இருக்கின்றார். ஹன்சிகா ஒரு இயற்கை வளங்களை பாதுகாக்கும் அமைப்பில் வேலை செய்கிறார்.

 இதற்கிடையில் சம்பத் மக்களுக்கு சேவை செய்கின்றேன் என்று கூறிக்கொண்டு, அமெரிக்காவை தளமாக கொண்டுள்ள DJ நிறுவனத்தின் உற்பத்திக்கழிவுகளை எந்தவொரு வடிகட்டல்களையும் செய்யாமல் நேரடியாக நடுக்கடலில் விட்டுவிடும் பணியை மிக இரகசியமான முறையில் செய்து வந்தார். DJ நிறுவனத்தினர் டெனிம் ஆடைகளை உற்பத்தி செய்பவர்கள். இவர்கள் முறையான வழிகளைப் பின்பற்றினால் உற்பத்திச்செலவு கூடுவதால் தமது போட்டி நிறுவனமான சீனாவின் சொகாங் நிறுவனத்தால் பின்தள்ளப்படும் என அஞ்சியே இதனை செய்கிறார்கள். இக்களிவுகளின் தாக்கம் முதலிரண்டு ஆண்டுகளிலும் தெரியாத போதும், பின்னர் மீனவக் கிராமங்கள் முதலில் பாதிக்கத் தொடங்கின. இப்பாதிப்புகளை அறிந்த ஹன்சிகா தனது அமைப்பினருக்கு தெரிவித்து அவர்கள் ஆய்வு செய்த போது எந்தவிதமான விடைகளையும் பெறமுடியவில்லை. தமிழ் நாட்டில் கழிவுகளை நேரடியாக பூமியுடன் கலைத்தல் தடை செய்யப்பட்ட போதும், இவை கண்டுபிடிக்க முடியாதலால் உஷார் அடைந்த சூர்யா மேலும் முயன்ற போது இதற்கு பின்னால் மத்திய அரசாங்கமும் இருப்பது தெரிய வருகின்றது.

பின்னர் துபாய் நாட்டில் வேலை பார்க்கும் இங்கிலாந்தைச் சேர்ந்த வல்லுனர்களான Willions ஐயும் Dovin ஐயும் யாழ்ப்பாணத்துக்கு அழைத்து அங்கிருந்தே ஆய்வுப்பணியை செய்வித்து உண்மையை நாட்டுக்கு தெரிவிக்கின்றார். இவை யாவும் இடைவேளைக்கு முன்னரே முடிவடைவதால், அநேகமானவர்கள் நினைத்தார்கள் இடைவேளைக்கு பின்னர் எவ்வாறு படத்தை இட்டுச்செல்லப் போகுறார் என்று. அங்குதான் படக் குழுவினர் தமது திறமையை வெளிப்படுத்தினர். எதிர்பார்க்காத திருப்பங்கள், காமெடி, காதல் என்று ஹரி தனது முழுத்திறமையை வெளிப்படுத்தினார். சம்பத்தை கைது செய்யும் விதம் திருப்பங்களின் திருப்பம். சந்தானம் இம்முறை விக்கிலீக்ஸ் ஐயும் விட்டு வைக்கவில்லை. சிங்கம் படத்தில் நடித்தவர்கள் இறுதியாக அறிமுகமாகும் காட்சிகள் மனதை தொடுகின்றன. இடைவேளைக்கு பின்னரான கதையையும் சொன்னால் தை வாசித்துவிட்டு செல்பவர்களுக்கு படத்தில் ஒரு திகில் இருக்காது.

சூர்யாவின் நடிப்பைப் பற்றி சொல்லத்தேவை இல்லை. ஹன்சிகா நடிப்பதற்கு அதிக சந்தர்ப்பத்தை இயக்குனர் வழங்கியுள்ளார். வழமை போல யாழ்ப்பாணம் என்று சொல்லி ஏதோ ஒரு இடத்தை காட்டுகின்றனர். சம்பத்தின் நடிப்பில் ரகுவரனின் இடத்தை நிரப்புகின்றார். சந்தானம் சொல்லவே தேவை இல்லை. ஹாரிஸ் ஜெயராஜ் இன் பாடல்கள் வழமை போல இருந்தாலும் பின்னணி இசையில் மிரட்டியுள்ளார்.

படத்தில் ஒரேயொரு பஞ்ச் டயலாக் “சூர்யாவை எண்ணெய் விளம்பரத்தில பார்த்திருப்பாய், வேட்டி விளம்பரத்தில பார்த்திருப்பாய்,ஏன் காபி விளம்பரத்தில கூட பார்த்திருப்பாய் ஆனா ‘டெனிம் ஜீன்ஸ்’ விளம்பரத்தில பார்த்திருக்க மாட்டாய்”.

 அஜீத்துகென்று டான் கதை, தனுஷுக்கென்று சைக்கோ கதை அதுபோல சூர்யாவுக்கு விஞ்ஞானக்கதையும் நாட்டுப்பற்றும் என்று ஆகிவிட்டது.

 இப்படம் குறித்து முன்னாள் முதல்வர் கருணாநிதி கூறும்போது 'தம்பி சூர்யா' தொடந்து மூன்று தடவைகள் (முன்னர் ஏழாம் அறிவு, மாற்றான்) தமிழ் நாட்டை காப்பாற்றி இருக்கின்றார், இவையாவும் ஜெயலலிதாவின் ஆட்சியிலே வெளிவந்த படங்கள், எனவே இவ்வாட்சி குறித்து மக்கள் யோசிக்க வேண்டிய காலம் வந்தது விட்டது என்றார். இயக்குனர், கவிஞர் மற்றும் இசைஅமைப்பாளர் என்று பலதிறமை உடைய திருப்பாச்சி புகழ் 'பேரரசு'விடம் கேட்டபொழுது படம் நன்றாக உள்ளது, இருந்தாலும் ஒரு குறை சூர்யா சாருக்குப் முன்னால் ஒரு பட்டமும் கிடையாது. என்னிடம் ஒரு நல்ல கதை உள்ளது, அவர் இப்படத்தில் நடித்தால் அவருக்கு "விஞ்ஞான நடிகன்'" என்ற பட்டத்தை வழங்குவேன் என்றார். படத்தின் பெயரைக் கேட்ட பொழுது.... 'பாலக்காடு'

மேலே கூறப்பட்டவை யாவும் கற்பனையே