Saturday, December 31, 2016
Saturday, December 24, 2016
இணையம் - தொடர்பாடல் சம்பந்தமான தமிழ் சொற்பதங்கள்
அன்றாட பேச்சு வழக்கில் தற்போது அதிகளவான ஆங்கிலச் சொற்கள் கையாளப்படுகின்றன. இது தவிர்க்க முடியாத ஒன்றாகிவிட்டது, ஏனெனில் தொழில்நுட்ப வளர்ச்சிச்சிக்கு ஈடு இணையாக தமிழ் சொற்பாவனை உபயோகிக்கப்படுவதில்லை. அத்தோடு அத்தொழில்நுட்ப சொற்களுக்குரிய தமிழ் சொற்கள் சாதாரண சொற்களுக்கு சற்று வேறுபட்டவையாக காணப்படுகின்றது. காரணம் ஆங்கிலச் சொல்லுக்குரிய தமிழ் பதத்தை தேடியமையே என்றால் மிகையாகாது. எவ்வாறாயினும் அண்மையில் சமூக வலைத்தளத்தில் கிடைத்த தகவல் கீழே.
- புலனம் - WhatsApp
- முகநூல் - Facebook
- வலையொளி - Youtube
- படவரி - Instagram
- அளாவி - Wechat
- பற்றியம் - Messenger
- கீச்சகம் - Twitter
- தொலைவரி - Telegram
- காயலை - Skype
- ஊடலை - Bluetooth
- அருகலை - WiFi
- பகிரலை - Hotspot
- ஆலலை - Broadband
- இயங்கலை - Online
- முடக்கலை - Offline
- விரலி - Thumbdrive
- வன்தட்டு - Hard Disk
- மின்கலம் - Battery
Labels:
இணையம்,
தமிழ்,
தொடர்பாடல்,
பொழுதுபோக்கு,
பொறியியல்,
விஞ்ஞானம்
Saturday, December 17, 2016
'இலங்கை அரசியல் யாப்பு'
தமிழர்கள் தம்மைத்தாமே புகழ்வதிலும் தமக்கிடையே பகை வளர்ப்பதிலும் ஒரு ஈடு இணையற்ற இனம் என்பது நடந்து முடிந்த இன விடுதலைக்கான போராட்டம் எடுத்துக் காட்டுகின்றது என்றால் மிகையல்ல. சர்வதேச வல்லாதிக்க நாடுகளுக்கு இணையான இராணுவ கட்டமைப்பை உருவாக்கிய மக்களால் ஒரு சிறந்த அரசியல் இராஜதந்திர அணிகளை உருவாக்க முனையாதது நீண்டகால தமிழர் சார் இனப்பிரச்சனை தோல்விகளுக்கு உடந்தையாக இருந்தது எனலாம். அதற்கு ஆரம்ப கால அரசியல் தலைவர்களின் கவனமின்மையும் அதன் பின் சிறப்பாக உருவாக்கப் பெற்ற இராணுவ ரீதியாக பலமான கட்டமைப்புகளும் அவற்றால் எதிரிகளை திணறடித்து பெறப்பட்ட வெற்றிகள் அரசியல் இராஜதந்திர நகர்வுகளை தேவையற்ற ஒன்றாக தமிழ் தலைமைகளிடம் எண்ண வைத்திருக்கலாம் அல்லது ஆயுதப் போராட்டத்துக்கு முன்னர் கிடைத்த கசப்பான அனுபவங்கள் என்று சொல்லப்படுகின்ற சிங்கள தேசத்துடனான முடிவு காணா அரசியல் ரீதியான பேச்சுவார்த்தைகள் அல்லது ஒப்பந்தங்கள் மற்றும் சர்வதேச வல்லரசுகளின் புவிசார் அரசியல் என்பன விரக்தியடையச் செய்தன என்றால் மிகச் சாலவே பொருந்தும்.
திரு. மு. திருநாவுக்கரசு அவர்களால் எழுதப்பட்ட 'இலங்கை அரசியல் யாப்பு' (டொனமூர் யாப்பு முதல் உத்தேச சிறிசேன யாப்பு வரை, 1931 - 2016) என்ற நூலை வாசித்த போது இதுவரை பத்திரிகையில் அல்லது இணையத்தளங்களிலோ வாசித்திராத பல விடயங்களை நூலாசிரியர் பதிந்துள்ளார். இதுவே இந்தப் புத்தகத்தில் கூறப்பட்டவற்றில் சில விடயங்களை மேலோட்டமாக ஒரு பதிவை எழுதத் தூண்டியது எனலாம். நூலாசிரியர் இலங்கையின் இனப் பிரச்சனை சூத்திரதாரிகளையும் தமிழ் தலைவர்களின் பிரயோகிக்கப்படாத கல்வியறிவையும் எடுத்துக்கூறியுள்ளார். நூலிலிருந்து பெறப்பட்ட விடயங்கள் சில கீழே.
அறிவியலால் அரசியலை திட்டமிடுகின்றார்கள். இலங்கையின் இனப் பிரச்சனைக்கு இலங்கையின் புவியியல்சார் அமைவு, புவிசார் அரசியல்-வெளிநாடுகளின் நலன்கள், சிங்களத் தலைமைகள் என்பன முக்கிய மூல காரணிகள். இம்மூன்று காரணிகளும் எவ்வாறு தமிழர்களுக்கு எதிராக திசை திருப்பபட்டதோ அல்லது 20ஆம் நூற்றாண்டின் ஆரம்பத்திலே தமிழ் தலைமைகளின் வெகுளிப் போக்கான அரசியல் நுண்ணறிவோ அல்லது இரண்டின் ஒருமித்த விளைவோ இன்றுவரை தீர்வு எட்டப்படாத ஒன்றாக இலங்கையின் (தமிழர்களின்) இனப்பிரச்னை காணப்படுகின்றது.
சிங்கள-பெளத்தர்கள் தமிழர்களை இந்தியாவுடன் இணைத்துப் பார்த்ததன் விளைவு இந்த இனப்பிரச்சனை. அதாவது மத, மொழி மற்றும் பண்பாடு ரீதியில் தமிழர்கள் இந்தியாவுடன் ஒத்துப் போவதையும் மகாவம்சம் என்னும் நூல்
சிங்கள-பெளத்தர்களை பிறப்பிலிருந்து இறப்புவரை ஆட்கொள்வதால் என்னவோ இந்தியாவையும் தமிழர்களையும் எதிரிகளாகப் பார்க்கும் நிலை மாறவில்லை. அதற்கு வலு சேர்ப்பதாக மகாவம்சத்தில் உள்ள பின்வரும் காடசியைப்பார்த்தால், துட்டகைமுனு மன்னன் எல்லாள மன்னனை போரிலே வெற்றிகொண்ட பின்னர் "போரில் இலட்சக் கணக்கானோர் (தமிழர்கள்) மடியும்படி நேரிட்டது கவலைக்கிடமாக உள்ளது" என்று கூறியவேளை துறவிகளின் குழு ஒன்று கீழ்வரும் விதமாக ஆறுதல் கூறியதாக கூறப்பட்டுள்ளது. "மன்னனே! இச்செயலின் காரணமாக நீ சொர்க்கத்துக்குப் போகும் பாதையில் எவ்வித தடையும் ஏற்படாது, அவ்வாறு கொல்லப்பட்ட அந்த இலட்சக்கணக்கானோர் நமது மார்க்கத்தை நம்பாதவர்கள், தீய வாழ்வை மேற்கொண்டவர்கள் மிருகங்களை விட உயர்வாக மதிக்கப் படக்கூடாதவர்கள்".
இவ்வாறான நூல்களால் போதிக்கப்பட்டு வளர்ந்த சிங்கள-பெளத்தர்களிடம் சமத்துவத்தை எதிபார்த்ததால் ஏற்பட்ட விளைவுதான் இன்றைய இலங்கையின் இரத்த ஆற்றின் மூலம் வெளிப்படுத்தப்பட்டுள்ளது. ஆயினும் சில சிங்கள அரசியல்வாதிகள் ஆரம்ப காலங்களில் சிங்கள-தமிழ் சமத்துவங்களை பேணுவது தொடர்பான சிந்தனைகளை கொண்டிருந்த போதும் பின்னாளில் அவர்களே தனிச் சிங்கள சட்டத்தை உருவாக்கியவர்கள். குறிப்பாக பண்டாரநாயக்க, பிலிப் குணவர்தன, கலாநிதி ஆர். டி. சில்வா போன்றோர் அவற்றுள் சிலர். இலங்கையின் வரலாற்றுக் கருப்பையில் சிங்கள-பெளத்த இனவாதத்துக்கு நல்ல சந்தை இருப்பதை உணர்ந்த இவர்கள் சிங்கள இனவாத வரலாற்றுப் போக்கை பலப்படுத்தியதுடன் அரசியல் ஆளுமைப் போட்டிக்கு இனவாதத்தை கையில் எடுத்தனர். இனவாத பாசறையான ஐக்கிய தேசியக் கட்சியின் பிதாமகர்கள் ஜெ. ஆர். ஜெயவர்தன, டி. எஸ். சேனநாயக்க, டட்லி சேனநாயக்க, லலித் அத்துலத்முதலி, காமினி திசாநாயக்க மற்றும் ரணில் விக்கிரமசிங்க போன்றோரும் சிறீலங்கா சுதந்திரக்கட்சியின் பண்டாரநாயக்க குடும்பமும் இவர்கள் எல்லோரினதும் மொத்த தொகுப்பான மஹிந்த ராஜபக்க்ஷவும் அதில் மிகப் பெரிய வெற்றியும் பெற்றிருந்தனர். இவை எமக்கு அறிந்த விடயங்கள் ஆனால் யாப்புக்கள் பற்றிய எமது அறிவு நிலை என்பது பாடசாலை பாடவிதானத்துடனே முடிவடைகின்றது. இங்குதான் மிக முக்கிய விடயங்களை நூலாசிரியர் சேர்த்துள்ளார்.
ஆனால் யாப்புக்களை பற்றி இலங்கை கல்வி அமைச்சின் பாடசாலை நூல்களில் 'சமூகக்கல்வியும் வரலாறும்' என்ற பாடத்திட்டத்தில் மேலோட்டமாக அவ்யாப்பிலுள்ள சில சரத்துக்களை மாத்திரமாக சொல்லிவிட்டு செல்லுகின்றது. ஆனால் ஏன் டொனமூர் மற்றும் சோல்பரி யாப்புகள் உருவாக்கப்பட்டது என அநேகமான ஆசிரியர்களால் கற்றுக்கொடுக்கப்படவும் இல்லை, அது ஏனோ மாணவர்களை பாடத்தில் அதிக புள்ளிபெறுவதற்காகவோ அல்லது ஆசிரியர்களுக்கும்
அதுபற்றிய
விடயங்கள் தெரியாமல் கூட இருந்திருக்கலாம். எப்படி இருப்பினும் நூலாசிரியரிடம் வருவோம்.
பிரித்தானியர்கள் இலங்கையை இந்தியாவிலிருந்து பிரித்தாளும் தந்திரத்தையே ஆரம்பத்திலிருந்து பின்பற்றி வந்திருந்தனர். ஆரம்பத்தில் பெரும்பான்மையினரான சிங்களவர்களின் மீதான ஆதிக்கத்தை இலகுபடுத்துவதற்காக தமிழரை அரவணைத்து அரசியல் நிர்வாகத்தை இலகுவாக முன்னெடுத்து சென்றனர். அவ்வேளையில் இந்தியாவில் 'இந்திய தேசிய காங்கிரஸ்' பிரித்தானியர்க்கு போராட்டத்தை முன்னெடுத்திருந்தனர். இதனால் கவரப்பட்ட யாழ்ப்பாணத்து இளைஞர்களால் இந்திய தேசிய காங்கிரசின் முக்கிய தலைவர்களான மகாத்மா காந்தி, நேரு போன்றவர்களின் யாழ்ப்பாணத்துக்கான விஜயங்கள் அமைந்தன. இது தமது
இலங்கையை இந்தியாவிலிருந்து பிரித்தாளும் தந்திரத்தை பாதிக்கும் என உணர்ந்த பிரித்தானியர் தமது காலனிய ஆதிக்க கொள்கை முடிவில் மாற்றம் செய்தனர். அந்த மாற்றத்தின் வெளிப்பாடே 1931 ஆம் ஆண்டு நடைமுறைக்கு வந்த 'டொனமூர்' அரசியல் யாப்பாகும்.
அதுவரை சிறுபான்மையினரை அரவணைத்து பெரும்பான்மையினரை ஆண்டு வந்த பிரித்தானியரின் பிரித்தாளும் தந்திரம் மாற்றம் பெற்றது, அதாவது பெரும்பான்மையினரான சிங்களவரை
அரவணைத்து இலங்கையை
இந்தியாவுக்கு எதிரான அரசியல் களமாக வளர்த்தல். இதற்கு பிரதேசவாரி பிரதிநிதித்துவத்தை உருவாக்குவதன் மூலம் இலங்கையின் மொத்த சனத்தொகையின் நான்கில் மூன்று பங்கை கொண்ட சிங்களவர்களிடம் அதிகாரத்தை கையளித்துவிட்டனர். அதன் பின்னர் உருவாக்கப்பட்ட 'சோல்பரி' யாப்பும் 'இந்திய எதிப்பு-தமிழ் எதிர்ப்பு' வாதத்தையே பிரதானமாக கொண்டிருந்தது. இது பற்றி சோல்பரி (படத்தில் உள்ளவர்) அவர்கள் 1960களில்
தமது பிராந்திய நிலை சார்பாக எடுத்த முடிவு என ஏற்றுக்கொண்டார். ஆனாலும் நிலைமை மேலும் மோசமாகிக் கொண்டே சென்றது. ஏனெனில் அதன் பின்னர் ஆட்சிக்கு வந்த சிங்கள தலைவர்கள் 'தனிச் சிங்கள சட்டங்களையும் இனவாதத்தை அள்ளித்தெளிக்கும்' கருத்துக்களை கொண்ட யாப்புகளை உருவாக்க முயற்சித்து வெற்றியும் பெற்றனர்.
இங்கு கவனிக்கப்படவேண்டிய முக்கிய விடயம் என்னவென்றால் 'டொனமூர்' மற்றும் 'சோல்பரி' யாப்பு என்பன உருவாக்கப்பட்ட போது தமிழ்த் தலைவர்கள் வெறும் அப்பாவித்தனமான அரசியல் விழிப்புணர்வுகளையே கொண்டிருந்ததாகவும் பின்னர் இவ்யாப்புக்களால் உருவாக்கிய சமநிலையற்ற தன்மைகளை பிரித்தானியரிடமே சென்று முறையிட்டார்கள் என்பது வேடிக்கை.
சிங்களவர்கள், போரை வெல்வதற்கு ராஜபக்சாக்களையும் நாட்டை பொருளாதார ரீதியில் கட்டியெழுப்புவதற்கு அதே ராஜபக்சாக்களை ஆட்சியிலிருந்து அகற்ற தமிழ் மக்களின் வாக்குகளை பெற்று புதிய கூட்டு அரசாங்கத்தை அமைத்தனர்.
ஆனாலும் தமிழ் மக்களின் பிரச்சனைகளைப் பற்றி சிறிது சிந்தித்தால் கூட தென்னிலங்கை கடும்போர்க்காளர்களால் குழப்பங்கள் உண்டு பண்ணப்படுகின்றது. இதை விட வேறு சிறந்த உதாரணம் தேவை இல்லை விடுதலைப் புலிகளின் ஆயுதமேந்திய விடுதலைப் போர். தற்போதைய இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களின் புதிய உத்தேச யாப்பு தொடர்பான கலந்துரையாடல்கள் மேற்கொள்ளப்படுகின்ற வேளையில் (இறைமையுள்ள) சமஷடி முறையிலான தீர்வை தமிழ் தேசிய கூட்ட்டமைப்பு, தமிழ் மக்கள் பேரவை, தமிழ் தேசிய முன்னணி என்பன ஆதரிக்கின்றன (சில வேறுபாடுகளுடன்). ஆனாலும் சிங்கள தேசம் முரண்டு பிடிக்குமே தவிர தீர்வை அடையவிடாது. அதற்கு அப்பால் சென்றால் நாட்டில் ஆட்சிமாற்றத்தை உருவாக்குவார்கள். இதையே இன்றைய பிரதமர் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா அம்மையார் மேற்கொண்ட சில இனப் பிரச்சனைக்கான தீர்வு
முயற்சிகளை
மேற்கொண்டபோது தடுத்து நிறுத்தினார்.
ஆயினும் இந்த சந்தர்ப்பத்தை சரியான
முறையில் பயன்படுத்தினால் ஒழிய மீண்டும் ஒரு வாய்ப்பு தமிழர்களுக்கு கிடைப்பதென்பது
அரிதே எமக்குள்ள பிரச்சனைகளை தீர்ப்பதென்பது. அநேகமானோர்க்கு சமஷடி முறை என்றால் என்ன என்று தெரியாது. அதுவே பாமர சிங்கள மக்கள் கூட தமிழ் விரோதப் போக்கை கடைப்பிடிக்க காரணமாகின்றது. அது மட்டுமன்றி இன்றைய இளைய அரசியல்வாதிகளாக செயற்பட எத்தனிப்பவர்கள் கூட அது பற்றிய தெளிவான அறிவை கொண்டுள்ளார்களா என்பது கேள்விக்குறியே?
இவ்வாறாக பல விடயங்களை இந்நூல் கொண்டுள்ளது. "....கண்ணுக்கு புலப்படாத சூக்கும வடிவிலிருக்கும் அரசியலை (politics), அரசியலின் அரசியலை (politics of politics), அரசியலின் மறுபக்கத்தை (other side of politics), அரசியலின் சாராம்சத்தை (Essence of politics) அரசியல் விளைவை (Consequence of politics) மக்கள் கண் முன் உருப்போட்டு சித்தரித்து காட்டும் பணியை இந்நூல் துணிவுடன் ஏற்றுள்ளது....". எனவே இவ்வாறான நூல்களை வெளியிடுவது மாத்திரமல்ல அவற்றை வாசித்தறிதல் மிக முக்கியமாகும்.
***
Labels:
அரசியல் விஞ்ஞானம்,
இலங்கை அரசியல் யாப்பு,
இனப்பிரச்சனை,
எல்லாளன்,
தமிழர்
Subscribe to:
Posts (Atom)